- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 17 August 2011

இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தாரா? இல்லையென்றால் மயக்கத்திலிருந்து உணர்வடைந்தாரா?


Did Jesus rise from the dead or did he recover from a state of unconsciousness?


'இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. ஆழ்ந்த மயக்க நிலையிலிருந்து அவர் மீண்டதையே அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் எனக் கூறுகின்றனர்“ என இரு பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தெரிவித்ததாக இலங்கை வானொலியி்ல் 27.04.1991 சனிக்கிழமை ஒலிபரப்பட்ட செய்தியிலும் அதனைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய செய்திப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட செய்தியிலும் குறிப்பிடப்பட்டது அநேக கிறிஸ்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய வேளையில், கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பதாய் இருந்தது. எனினும் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. அவர் மயக்க நிலையிலேயே இருந்தார் எனும் இக்கருத்து இன்று உருவான ஒரு புதிய கருத்து அல்ல. கிறிஸ்தவ மார்க்கத்தின் மையமாக இயேசு கிறிஸ்துவின்  உயிர்தெழுதல் அமைந்திருப்பதனால், கிறிஸ்தவத்தை அழிக்க முயற்சித்த அனைவருமே இயேசு கிறிஸ்து உயிர்தெழுதலை மறுதலிக்க பலவிதமான கருத்துக்களை காலத்திற்குக் காலம் கூறிவந்துள்ளனர். எனவே, நம்நாட்டின் செய்தியளிப்பு ஊடகங்கள் மூலமாக கொடுக்கப்பட்ட இச்செய்தி, ஒரு புதிய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு அல்ல. மாறாக ஒரு பழைய கண்டத்தின் ஒரு புது அறிவிப்பேயாகும். 

“இரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணத்தால் கிறிஸ்து சிலுவையில் உணர்விழந்தார். அவரது தோல் கருமை படிந்திருந்ததையும் அவர் அசைவற்று இருந்ததையும் வைத்து அவர் இறந்துவிட்டாரென்று தவறாக கணிக்கப்பட்டது. இதனால் அவரைச் சுற்றி நின்றவர்கள் அவர் இறந்து விட்டாரென்று நம்பியதில் எதுவித சந்தேகங்களுமில்லை“ என்று லோயா டேவிஸ் என்பவரும் மார்கிரட் என்ற சித்தாந்தவாதியான அவரது மனைவியும் தெரிவித்துள்ளதாக 28.04.91 இல் இதுபற்றி பிரசுரிக்கப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததற்கான போதுமான சான்றுகள் இருக்கும்போது, அவர் இரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக சிலுவையில் உணர்விழந்தார் எனக் கூறுவது அறிவீனமானதும் ஆதாரச்சான்றுகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலையையுமே காட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே இயேசு கிறிஸ்து, மயக்கத்திலிருந்து உணர்வடையவில்லை. மாறாக மரணத்திலிருந்தே உயிர்த்தெழுந்தார் என்பதற்கான ஆதாரச் சான்றுகளை ஆராய்ந்தறிவோம். 

(1) இயேசு கிறிஸ்து சிலுவையிலறையப்பட்டார் 


இயேசு கிறிஸ்துவின் மரணம் இயற்கையான முறையில் ஏற்பட்டதொன்றல்ல. அவர் சிலுவை மரத்தில் அறையப்பட்டு மரணமடைந்தார் சிலுவை மரத்தில் ஒருவனை அறைந்து கொலை செய்வது, அக்காலத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட முறையாகும். “ஆரம்பகாலத்தில் காட்டுமிராண்டி களினால் அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறையி யானது பின்பு, பெர்சியர்களினாலும் அதன் பின்ப கிரேக்கர்களாலும் ரோமர்களினாலும் பின்பற்றப்பட்டது. (The Cross of Christ by John Stott) இது மிகவும் கொடூரமான மரணதண்டனை முறையாகும். சிலுவை உருவில் (+ எனும் உருவில்) அமைக்கப்பட்ட மரத்தில் கைகளும் கால்களும் பிணைக்கப்பட்டு ஆணிகள் அடிக்கப்பட்ட நிலையில் ஒருவனை தொங்கவைப்பது மூர்க்கமான, ஈவிரக்கமற்ற மரணதண்டனை முறை என்பதை மறுப்பதற்கில்லை. “கி.பி. 315 இல் ரோம சக்கரவர்த்தியான கொன்ஸ்டன்டைன் மரணதண்டனை முறையை மாற்றியமைக்கும் வரை இம்முறையே பின்பற்றப்பட்டு வந்தது. “ (Crucifixion by D.H.Wheaton in New Bible Dictionary) இயேசு கிறிஸ்துவும் ஒரு குற்றவாளியைப் போல் சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்தார். (மத். 27:35-56, மாற் 15:24-41, லூக் 23:33-49, யோவான் 19:18-30)

ரோமர்கள் குற்றவாளியை சிலுவையில் அறைந்து மரணதண்டனையை நிறைவேற்றும்முறை இயேசு சிலுவையில் மயக்க நிலையில் இருக்கவில்லை. மாறாக, மரித்து விட்டதை உறுதிப்படுத்துகிறது. அக்காலத்தில் ஒருவனுக்கு மரணதண்டனை எனும் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் அவனை ஒரு தூணில் கட்டிவைத்து, ஆடைகளை அகற்றி, தோல் கிழிந்து இரத்தம் பெருக்கெடுத்து வழிந்தோடும்வரை அவனை சாட்டையால் அடிப்பது வழமை. இவ்வாறு குற்றவாளியை அடிப்பதற்கு ரோமர்கள் உபயோகித்த சாட்டையானது கூரிய பற்களைக் கொண்ட எலும்புத் துண்டுகளும், ஈயத் துண்டுகளும் பொருத்தப்பட்ட, தோலினால் செய்யப்பட்ட பல வார்களைக் கொண்ட சாட்டையாகும். இத்தகைய சாட்டையால் ஒருவனை அடிக்கும்போது அவனது தோல் கிழிந்து, நாடி நாளங்கள் உடைபட்டு, இரத்தம் வழிந்தோடும். “குற்றவாளி மரிக்கும்நிலையை அடையும் வரை அவனை சாட்டையால் அடிப்பது உரோமர்களது வழக்கமாகும். (Crucifixion of Jesus by C. T.Davis) இதை மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான இயூசிபியசும் உறுதிப்படுத்தியுள்ளார். (Trials and crucifixion of Christ by Eusebius) இயேசு கிறிஸ்து இவ்வாறு அடிக்கப்பட்டார் என வேதம் கூறுகிறது. (யோவான் 19:1, மாற்கு 15:15, மத்தேயு 27:26)உண்மையில் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் இவ்வாறு அடிக்கப்பட்டது அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே மரிக்கக்கூடிய நிலையை அடைந்து விட்டதை காட்டுகிறது. 

அக்காலத்தில் மரணதண்டனை என குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட இடத்திலிருந்து தண்டனை நிறைவேற்றப்டும் இடம்வரை குற்றவாளியே தன்னுடைய சிலுவையை எடு்த்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இதனால் இயேசுவை அடித்த போர்வீரர்கள் அவரை நிந்தித்து, சிலுவை அவர் மீது வைத்து, அதை சுமந்துவரும்படி அவரைப் பணித்தனர். ஆனாலும் இயேசு கிறிஸ்து  நன்றாக அடிக்கப்பட்டு மரிக்கக்கூடிய நிலையை அடைந்திருந்தமையால், அவரால் அதை சுமக்க முடியாமல் இருந்தது. “குற்றவாளி தன்னுடைய சிலுவையை சுமக்க முடியாது பலவீனமாக இருந்ததால், ரோமப் போர்வீரர்கள் தம் கண்ணில் தென்படும் ஒரு உள்ளூர்வாசியை சிலுவையை சுமந்து வரும்படி பலவந்தப்படுத்துவர் (The Daily Study Bible : Matthew by William Barclay) இதனால் அவ்வழியே வந்த சீமோன் எனும் மனிதனை இயேசுவின் சிலுவையை சுமந்து வரும்படி செய்தனர். (மத். 27:32, மாற்கு 15:21)  உண்மையில்.  இயேசுவால் தன்னுடைய சிலுவையைக் கூட சுமக்க முடியாமல் இருந்தமைக்குக் காரணம், அவர் மரிக்கக்கூடிய வண்ணம் பலவீனமான நிலையிலேயே இருந்தமையே என்பதை மறுப்பதிற்கில்லை.

சிலுவையில் அறையப்படும் இடத்திற்கு குற்றவாளி வந்து சேர்ந்ததும் அவனது கைகளும் கால்களும் சிலுவை மரத்தில் பிணைக்கப்பட்டு, ஆணிகள் அடிக்கப்பட்டு, தொங்கவிடப்படுவான். இயேசுவை “கொல்கொதா“ என்னுமிடத்தில் இவ்விதமாக ரோமப் போர்வீரர்கள் சிலுவையில் அறைந்தனர். (மாற். 15:22-24, மத். 27:32-35) அவர் ஆறு மணித்தியாலங்கள் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபின் மரணமடைந்தார். (மாற். 15:24-26 உடன் மத். 27:46-50 ஒப்பிடவும்) இயேசு கிறிஸ்து சாட்டைமயினால் நன்றாக அடிக்கப்ப்டு மரிக்கக்கூடிய நிலையில் இருந்தமையினாலேயே சிலுவையில் அறையப்பட்டு ஆறு மணித்தியாலங்களில் மரணமடைந்தார். (மத். 27:50, மாற்கு 15:37, லூக். 23:46) அவர் மயக்க நிலையில் இருக்கவில்லை. 

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்தமையினாலேயே அவருடைய காலெழும்புகள் முறிக்கப்படவில்லை. (யோவான். 19:32-33) ரோமர்கள் யாரையாவது சிலுவையில் அறைந்தால், அவனை அப்படியே சிலுவையில் இருந்து மரிப்பதற்கு விட்டுவிடுவார்கள். சில சமயங்களில் குற்றவாளிகள் நாட்கணக்கில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் யூதர்கள் தண்டிக்கப்பட்ட நாளிலேயே அடக்கம் ப்ண்ணவேண்டும் எனும் தேவகட்டளையின்படி வாழ்ந்தனர். (உபா. 2:22-23) மேலும் ஓய்வு நாளானது சரீரங்கள் மரத்தில் தொங்கவிடக்கூடாது என்பதனால் அவர்கள் சிலுவையில் அறையப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்காக அவர்களது காலெலும்புகளை முறிக்கும்படிக்கும் சரீரங்களை எடுத்துக் கொண்டு போவதற்கும் பிலாத்துவிடம் அனுமதி கேட்டனர். (யோவான் 19:31) 'சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பவனை உடனடியாக மரிக்க வைக்க வேண்டுமானால் அவனது காலெழும்புகள் முறிக்கப்படும். (The Resurrection factor by Josh McDowell) பிலாத்து சரீரங்களை எடுத்துச் செல்ல அனுமதி கொடுத்தமையால் போர்வீரர்கள் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டவ்களின் காலெழும்புகளை முறித்தனர். ஆனால் இயேசுவின் காலெழும்புகளை முறிக்கவேண்டியதாயிருக்கவில்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே மரித்திருந்தார். (யோவான் 19:32-33) இயேசு கிறிஸ்து சிலுவையில் மயங்கிய நிலையில் இருந்திருந்தால் அவரைது காலெழும்புகள் முறிக்கப்பட்டிருக்கும். அவர் மரித்திருந்தமையினாலேயே அவரது காலெழும்புகள் முறிக்கப்படவில்லை. மேலும் பிலாத்து, இயேசு கிறிஸ்து மரித்ததை உறுதிப்படுத்தியபின்பே சரீரத்தை யூதர்களிடம் கொடுத்தான். (மாற். 15:43-45) அத்தோடு அவரை சிலுவையில் அறைந்த ரோமப் போர்வீரர்கள் மய்ககத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அறியாதவ்கள் அல்லர். அவர் மரித்திருந்தமையினாலேயே அவரது சரீரத்தை யூதர்களிடம் கொடுத்தனர். 


இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் ஈட்டியினால் குத்தப்பட்ட அவரது விலாவில் இருந்து புறப்பட்டு வந்த இரத்தமும் தண்ணீருமாகும். (யோவான். 19:34) “இச்சமயம் இயேசு சிலுவையில் மரிக்காமல் இருந்திருந்தால் அவருடைய விலாவில் போர்ச்சேவகன் ஈட்டியால் குத்தியபோது இரத்தம் மட்டுமே வந்திருக்கும். ஆனால் அவருடைய சரீரத்திலிருந்து தண்ணீரும் வந்தது. அவர் மரித்திருந்ததையே காட்டுகிறது. (The Day Death Died by Michael Green) “இதய வெடிப்பால் மரித்த சடங்லங்களைப் பரிசோதித்த வைத்தியர்கள் அச்சடலங்களில் இதயத்தைச் சூழவுள்ள பகுதியில் உறைந்த நிலையில் இரத்தமும் தண்ணீர் போன்ற திரவமும் இருப்பதற்கு அத்தாட்சிகளாய் உள்ளனர். (Did Jesus Die of a Broken Heart by Stuart Bersma) “மரிக்க்கூடிய நிலையில் மிகவும் பலவீனத்தோடு இரு கரங்களும் இருபாகத்திலும் நீட்டப்பட்டு, சிலுவை கிடைக்கம்பத்தின் இரு ப்ககத்திலும் பிணைக்கப்பட்ட நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தமையால் அவரது இருதயம் வெடித்து அவர் மரித்துள்ளார். (The Daily Study Bible : John by. W. Barclay) அவருடைய விலாவில் இருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டு வந்ததாக வேதம் கூறுகிறது. (யோவான் 19:34) எனவே இயேசு கிறிஸ்து உண்மையிலேயே சிலுவையில் மரித்திருந்தார் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. 

(2) இயேசு கிறிஸ்து கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார். 


இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. அவர் மய்ககநிலையிலேயே இருந்தார் எனும் பத்திரிகை செய்தியில “இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு நிலத்தில் வைக்கப்பட்டதும் இரத்த ஓட்டம் மீண்டும் ஏற்பட்டது. இயேசுவுக்கு உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் அவரை எடுத்துச் சென்று பராமரித்தனர் என்று லண்டனிலுள்ள ரோயல் கல்லூரி மருத்துவ சஞ்சிகையில்  வெளியிடப்பட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (தினகரன் 28.04.91) ஆனால் அவர் இரு கரங்களும் சிலுவை மரத்தின் கிடைகம்பத்தில் நீட்டப்பட்ட நிலையில் பிணைக்கப்பட்டிருந்தமையால் இதயம் இழுக்கபட்ட கிழிந்து மரித்தார் என்று பார்த்தோம். இயேசு கிறிஸ்து மரித்ததை உறுதிப்படுத்திய பின்பு அவருடைய சரீரத்தை பிலாத்து யூதர்களிடம் கையளித்தான் (மாற்கு 15:43-45) அதன் பின்பு அவருடைய சரீரம் யூத முறையின்படி அடக்கம் பண்ணப்பட்டது. (மத். 2757-60, மாற். 15:42-47, லூக். 23:50-55, யோவான் 19:38-42) இயேசு கிறிஸ்து உண்மையிலேயே மரித்திருந்தமையினாலேயே அவருடைய சரீரம் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டது. 

இயேசு கிறிஸ்துவின் சரீரம் யூத முறையின்படி அடக்கம் பணணப்பட்டமையினால் (யோவான். 19:40) அவர் சிலுவையில் மயக்க நிலையில் இருந்திருந்தால், மரண சடங்குகள் அவரை மயக்கத்திருந்து எழுப்பியிருக்கும். ஏனென்றால், “அவர்கள் மரித்த சரீரத்தை அடக்கம் செய்வதற்கு முன்பு அதை கல்லினால் செய்யப்பட்ட ஒரு மேசையின்மேல் வைத்து,, இளஞ்சூடான நீரினால் கழுவுவார்கள். (Belief Rites and Customs of the Jews Connected with Death Burial and mourning by A.P. Bender) இயேசு கிறிஸ்து உண்மையில் மரிக்காமல் இருந்திருந்தால் இவ்வாறு அவரைக் கழுவிய போது அவர் மயக்கம் தெளிந்து எழுந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடககவில்லை. “சரீரம் கழுவப்பட்டதன் பின் வாசனைத் திரவியங்கள் போடப்பட்டு சீலைகளினால் சுற்றப்பட்டு கல்லறைக்குள் வைக்கப்படும் (Ibid) காலிலிருந்து கழுத்து வரையும் முதலில் சீலைகள் சுற்றப்படும். பின்பு தலை தனியாக சுற்றப்படும். “சீலைகளை இலகுவாக சரீரத்திலிருந்து பிரித்தெழுக்க முடியாத வண்ணம் ஒட்டுந் தன்மையுடைய வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டு சீலைகள் சரீரத்தை சுற்றி சுற்றப்படும். (Homilies of St. John by. J. Chrysostom) இயேசு கிறிஸ்துவின் சரீரமும் இவ்வாறு வாசனைத் திரவியங்களுடன் சீலைகளினால் சுற்றப்பட்டு கல்லறையொன்றுக்குள் வைக்கப்பட்டது. (யோவான் 19:41-43, லூக். 23:53)

இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல் புரட்டி வைக்கப்பட்டதோடு (மத். 27:60) சரீரத்தை எவரும் களவெடுத்துக் கொண்டு போய்விடக்கூடாது என்பதற்காக காவலும் போடப்பட்டு அதற்கு அரசின் முத்திரையும் இடப்பட்டது (மத். 27:65-66) எனவே சரீரம் அக்கல்லறைக்குள் இருந்தது என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. 

“இயேசுவின் கல்லறையில் போடப்பட்ட ரோம மு்த்திரையானது அவரது சரீரம் அங்கு இருக்கிறது என்பதை ரோம அரசு உறுதிப்படுத்து்ம் செயலாக உள்ளது. (The Resurrection Factor by Josh McDowell) இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தமையினாலேயே அவருடைய சரீரம் கல்லறைக்கள் வைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து கல்லறையில் அவருடைய சரீரம் அடக்கம் பண்ணப்பட்டமையினால் அவர் மயக்கத்திலிருந்து உணர்வடைந்தார் என கூறுவதற்கில்லை வேதாகமம் தெளிவாக குறிப்பிடுவது போல அவர் மரணத்திலிருந்தே உயிர்த்தெழுந்தார்)

(நன்றி சத்தியவசனம், 1991, கட்டுரையாசிரியர் சகோ. எம்.எஸ் வசந்தகுமார்)


தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment